ஆசை...

Gandhi, Jesus, Money, Tamil, Tamil Blog

வாழ்க்கையை சந்தோஷமுடன் கொண்டு செல்ல, பணம் அவசியமானது. பணமில்லாதவன் பிணம் என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் பணமே வாழ்க்கை ஆகிவிடாது. பணத்திற்கு அதிகமாக ஆசை வைக்கும்போது, அது அவனின் சந்தோஷத்தை, நிம்மதியை சமயத்தில் அழித்து விடும் சக்தியை கொண்டது.

இரண்டு நண்பர்கள். சிறு வயதில் இருந்தே ஒன்றாக இணைந்து, படித்து, விளையாடி வளர்ந்தவர்கள். இன்ப துன்பங்களில் ஒன்றாக பங்கேற்றவர்கள்.

அந்த நண்பர்களில் ஒருவன் கடந்த சில நாட்களாக வருத்தத்திலும் சோகத்திலும் இருப்பதை பார்த்து மற்றவன் கேட்கிறான்.

“ஏண்டா இப்படி கவலையோட இருக்க. என்னாச்சி..”

“ஒண்ணுமில்லடா..”

“கவலைய மனசில வச்சிக்கிறத விட வெளியில சொன்னா கொஞ்சம் அமைதியும் சந்தோசமும் உண்டாகும். சொல்லணும்னு தோணிச்சின்னா சொல்லு..”

“ஆறு மாசத்துக்கு முன்னாடி என்னோட பெரியப்பா செத்துப் போனாரு..”

“மன்னிச்சிருடா. இது எனக்கு தெரியாமப்போச்சி.”

“அதில்லடா. அவரு செத்தப்ப வாரிசு யாரும் இல்லாததினால, அவரோட பேருல இருந்த ஐந்து லட்சத்துக்கு மேலான சொத்து எனக்கு வந்திச்சி..”

“வாவ்..இதுக்கு சந்தோசம் இல்லடா படணும். ஏன் இவ்வளவு சோகத்தில இருக்க..”

“ரெண்டு மாதத்துக்கு முன்னாடி என்னோட சித்தப்பா செத்துப்போனாரு…”

“ஒ..சாரிடா..இத நீ எனக்கு சொல்லவே இல்ல..”

“அதில்லடா. அவரு செத்தப்ப அவரோட பேருல இருந்த அம்பது லட்ச ரூபாய என்னோட பேருல எழுதி வச்சிருக்கார். "

நண்பன் குதிக்காத குறையாக, " நீ கொடுத்து வச்சவண்டா. இல்லன்னா சொத்த எழுதி வச்சிட்டு செத்திருப்பாரா..”

“உனக்கு ஒண்ணும் புரியலடா. இனிமேல் சாவதற்கு என்னோட அப்பா வழியில யாருமில்ல..”

இப்படித்தான் கிடைத்த பணத்தை சுகமாக அனுபவிக்காமல் ‘இனியும் கிடைக்காதா? கிடைக்காதா?’ என்று ஏங்கும் பலர், வேண்டாத வழிகளில் அதை தேட முயல்கிறார்கள்.

தேவன் சொல்லுவதை கேளுங்கள்:

போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.

உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.

உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்க கடவோம்.

பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது. 1 திமொத்தியு 6: 6 - 10